1. முதலில் கல்லூரியில் சேர்வதற்கான காரணத்தை மனதில் ஊன்றுங்கள். பொழுதுபோக்கிற்காகவோ, வேறு வழியில்லாமலோ நீங்கள் கல்லூரிக்குள் வரவில்லை என்பதை உணருங்கள்.
2. எந்த வகுப்பில் சேருகிறீர்களோ, அதிலுள்ள பாடங்களை விரும்பிப் படியுங்கள். மனப்பாடம் செய்வது பள்ளியுடன் விடைபெறவேண்டும். பாடங்கள் தொடர்பான புதிய புதிய தகவல்களை இணையம் போன்ற ஊடகங்கள் மூலமாக அதிகம் கற்றுக் கொள்வதே கல்லூரிப் படிப்பாய் இருக்கவேண்டும்.
3. கல்லூரி வாழ்க்கை வகுப்பறைகளைத் தாண்டியது. கல்லூரிகளில் உள்ள குழுக்களில் உங்கள் திறமைக்குத் தீனிபோடும் குழுக்களில் இணைந்து பணியாற்றுங்கள். அது உங்களுடைய திறமைகளை வளர்ப்பதுடன் குழுவாகப் பணிபுரியும் அனுபவத்தையும் வழங்கும்.
4. சமுதாயப் பணி செய்யும் வாய்ப்புகள் கல்லூரி காலத்தில் அதிகமாகவே கிடைக்கும். கல்விக்கு தொய்வு வராத அளவில் சமூக ஈடுபாட்டை வளர்த்துக் கொள்தல் மிகவும் முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான சமூகம் கட்டி எழுப்பப்பட கல்லூரியில் மதிப்பெண்கள் மட்டுமல்ல, நல்ல மதிப்பீடுகளைப் பெறுதலும் அவசியம்.
5. கல்லூரியில் எந்தவிதமான பிரிவினை சிந்தனைகளையும் கொண்டிருக்காதீர்கள். குறிப்பாக அரசியல், சாதி, மொழி போன்றவற்றைக் கடந்து அனைவருடனும் பழகுதல் அவசியம். சாதீய குழுக்கள் போன்றவற்றில் இணையவே இணையாதீர்கள்.
6. கல்லூரி கால வாழ்க்கை உங்களை படிப்படியாக உங்கள் இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக இருப்பது சிறப்பு. அதற்குரிய வகையில் உங்கள் கல்வியையும், பிற குழுக்களுடனான செயலபாடுகளையும், முயற்சிகளையும் வகைப்படுத்திக் கொள்ளுங்கள்
7. கல்லூரி காலம் மாணவர்களுக்கு பரவசகாலம். பெற்றோருக்கோ அது பதட்டத்தின் காலம். எனவே பெற்றோருடன் மனம் விட்டு உரையாடி அவர்களுடைய வழிகாட்டுதலையும், வாழ்த்துக்களையும் பெற மறவாதீர்கள். அது உங்கள் மனதை வலுவூட்டும்.
8. ஆசிரியர்களுடனும், நல்ல நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். மது, கேளிக்கை, போதை போன்ற தவறான வழி காட்டும் நண்பர்களை நாசூக்காய் விலக்கி விடுவது மிகவும் முக்கியம். கல்லூரி நூலகம் மிகவும் முக்கியமான இடம். உங்கள் ஓய்வு நேரங்களை அங்கே செலவிட முயலுங்கள்.
9. பாலியல் ரீதியாக பல தவறுகள் நிகழவும் கல்லூரிகளில் சாத்தியம் உண்டு. பாலியல் விருப்பங்கள், சிற்றின்பத் தேடல்கள் போன்றவற்றை சற்று ஒதுக்கியே வையுங்கள். அதற்கான காலம் இதுவல்ல என்பதும், எல்லா செயல்களுக்கும் உகந்த காலம் ஒன்று உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
10. எவையெல்லாம் முதன்மையானவை, எவையெல்லாம் உங்கள் இலட்சியத்துக்குத் தேவையானவை என்பதில் தெளிவு கொள்ளுங்கள். உங்கள் பலம் பலவீனம் போன்றவற்றின் தெளிவாய் இருங்கள். கவனம் செலுத்த வேண்டிய பாடங்களில் துவக்கம் முதலே கவனம் செலுத்துங்கள்.
11. கல்லூரிக் காலத்திலேயே உங்களுடைய பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை போன்றவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். கூச்ச சுபாவத்தை ஒழிக்கக் கூடிய குழு நிகழ்ச்சிகள், போட்டிகள், கலந்துரையாடல்களில் அதிகம் பங்கு பெறுங்கள். கல்லூரியைத் தாண்டிய உங்கள் வாழ்க்கைக்கு இவை மிகவும் பயனளிக்கும்.
12. கல்லூரிகாலம் மன மகிழ்ச்சிக்கான காலம் என்பதைப் போலவே மன அழுத்தங்களைத் தரும் காலம் கூட என்கின்றன மருத்துவ ஆய்வுகள். சுமார் 25 விழுக்காடு கல்லூரி மாணவர்கள் ஏதோ ஒருவகையில் மன அழுத்தம் அடைகின்றனர் என்கின்றன ஆய்வுகள். எனவே மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதைப் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ விவாதித்து மனதைத் தெளிவுபடுத்திக் கொள்தல் அவசியம்
13. பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையும் உள்ளுணர்வும் கொண்டிருங்கள். கல்லூரி காலத்தில் அசட்டுத் துணிச்சலுடன் ஈடுபடும் செயல்கள் உங்களை சிக்கலில் கொண்டு சேர்க்கக் கூடும் என்பதில் கவனமாய் இருங்கள்.
14. பணத்தை சிக்கனமாய் செலவிடப் பழகுங்கள். மாதத்துக்குரிய செலவுப் பட்டியலைத் தயாரிப்பதும், திட்டமிட்டு செலவிடுதலும் பிற்காலத்தில் உங்களுக்கு உதவும். குறிப்பாக வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் செலவுகளைத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.
15. உங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோ, அதீத உயர் மனப்பான்மையோ கொண்டிராமல் இயல்பாய் இருக்கப் பழகுங்கள்.
16. ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள். சரியாக உண்டு, சரியாக உறங்கி, தேவையான உடற்பயிற்சிகளுடன் கல்வியைப் பயிலுங்கள். இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, உண்ணாமல் அலைவது போன்ற பழக்கங்களெல்லாம் உருவாக்கும் சிக்கல்கள் பிற்காலத்தில் பெரும் கேடு விளைவிக்கக் கூடும்.
17. நிறைய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் ஆரோக்கியமாக உரையாடுவதும், உங்களுக்குப் பழக்கமற்ற நல்ல செயல்களை செய்ய முனைவதும் என அனைத்துக்குமான அருமையான பயிற்சிக் களம் கல்லூரி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
18. உங்கள் வெற்றியும் தோல்வியும் உங்களுடைய கல்வி ஈடுபாடு, வகுப்பில் கவனம், வருகை, ஒழுக்கம் இவற்றைப் பொறுத்தே அமையும். எனவே அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். வகுப்பறைகளுக்கு மட்டம் போடுவதைத் தவிருங்கள். தவிர்க்கும் ஒவ்வோர் வகுப்பின் வாயிலாகவும் நீங்கள் எதையோ இழக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.
19. தெளிவாக குறிப்பு எடுப்பதைப் பழக்கப்படுத்துங்கள். வகுப்பறைகள், நூலகங்கள், உரையாடல்கள் என எங்கெல்லாம் தேவையான தகவல்கள் கிடைக்கின்றனவோ அவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்தல் பயனளிக்கும்.
20. படிப்பில் ஆர்வமுடைய நல்ல ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இணைந்து படிப்பது இரு மடங்கு பலனளிக்கும். நீங்கள் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையெனில் உடைந்து விடாதீர்கள். அதன் காரணத்தைக் கண்டுணர்ந்து அடுத்தடுத்த செமஸ்டர்களில் அதை சரி செய்யுங்கள்.
பெற்றோரும் கல்லூரிக்குப் போங்க..
கல்லூரியில் மகனையோ மகளையோ அனுப்பி விட்டவுடன், தனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு நிரப்ப முடியாத பள்ளம் வந்து விடுவதைப் போலவோ, இனிமேல் தங்கள் கடமை ஏதும் இல்லை என்பது போலவோ பெற்றோர் சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.
1. பிள்ளைகள் கல்லூரியில் என்ன பாடம் எடுத்திருக்கிறார்கள் ? அவர்கள் பயிலும் கட்டிடம் எங்கே இருக்கிறது, அவர்களுடைய ஆசிரியர்கள் யார் யார் ? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
2. பிள்ளைகள் கல்லூரியில் என்னென்ன இயக்கங்களில், குழுக்களில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தலைமைப் பண்பையோ, திறமையோ உருவாக்கும் இயக்கங்களில் இணைய ஊக்கப்படுத்துங்கள்.
3. அவ்வப்போது கல்லூரிக்குச் சென்று பிள்ளைகளின் வருகை, கல்வித் திறமை, ஒழுக்கம் போன்றவற்றைக் கேட்டுணருங்கள். அதற்காக அடிக்கடி கல்லூரிக்குச் செல்லும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். முடிந்தால் கட்டணங்கள் கட்ட வேண்டிய காலகட்டங்களில் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று வாருங்கள்.
4. அவர்களுடைய வகுப்புத் தோழர்கள், தோழிகள் சிலருடைய தொடர்பு விலாசங்கள், எண்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவசரத் தொடர்புக்கு மிகவும் உதவும்.
5. பிள்ளைகளுக்கு திரும்பத் திரும்ப அறிவுரை கூறுகிறேன் என தொந்தரவு செய்யாதீர்கள், ஓரிரு முறை சொன்னாலே நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்றும் திறமை பெற்றுவிட்டார்கள் கல்லூரி மாணவர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள்.
6. கல்லூரி நிகழ்வுகள், காம்பிங், சுற்றுலா போன்றவற்றுக்கு பிள்ளைகளே முடிவெடுக்கட்டும். உங்கள் சிந்தனைகளை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
7. முக்கியமாக பள்ளியில் படித்த குழந்தைக்கும், கல்லூரி மாணவனுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நடவடிக்கைகளில் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் நாசூக்காகச் சுட்டிக் காட்டுங்கள். தண்டனை கொடுக்கிறேன் என சிக்கலைப் பெரிதாக்காதீர்கள்.
8. கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டுமே தவிர கட்டளைகளைப் பிறப்பிப்பவர்களாக இருக்கக் கூடாது.
FACEBOOK GROUP:
https://www.facebook.com/pages/Indian-Youths-Discussion/167879393298428
https://www.facebook.com/pages/We-need-a-revolution-in-the-education-system-in-India/154693987892239
thanx2- vimalaranjan.blogspot